4667.பின்னரும் கூறுவான்:
      'பிலத்தில், வானத்தில்,
பொன் வரைக் குடுமியில்,
      புறத்துள் அண்டத்தில்,
நல் நுதல் தேவியைக்
      காண்டும் நாம் எனின்,
சொன்ன நாள் அவதியை
      இறைவன் சொல்லுமோ?

     பின்னரும் கூறுவான் - அனுமன் மேலும் சொல்லுவான்; பிலத்தில் -
பாதாள உலகத்திலும்; வானத்தில் - தேவருலகத்திலும்; பொன் வரைக்
குடுமியில் -
பொன்மலையான மேரு மலைச் சிகரத்திலும்; புறத்துள்
அண்டத்தில் -
மற்றும் அப்பாலுள்ள அண்டங்களிலும்; நன்னுதல்
தேவியை-
அழகான நெற்றியையுடைய சீதையை; நாம் காண்டும் எனில் -
நாம்தேடிக் காண்போமானால்; இறைவன் - (நம்) அரசனான சுக்கிரீவன்;
சொன்னநாள் அவதியை - நமக்குக் குறித்த தவணை நாட்களில் எல்லை
கடந்ததைப்பற்றி; சொல்லுமோ - குற்றமாக எடுத்துக் கூறுவானோ?

     ஓ: வினா இடைச் சொல்.

     சீதையைத் தேடிக் காண்பது இன்றிமையாத தொழிலாதலால் தவணை
நாள் கடந்தமைக்குச் சிறிதும் கலங்காது நாம் மேற்கொண்ட செயலில்
ஊக்கங்கொள்வதுதான் தக்கது; அவ்வாறு அச் செயலை நாம் சிறப்பாகச்
செய்து முடித்தால் சுக்கிரீவன் நம் செயலைப் பாராட்டுவனேயல்லாமல் ஒரு
நாளும் கண்டிக்கவே மாட்டான் என்று அவ் வானரர்க்கு அனுமன்
எடுத்துரைத்தான்.                                             20