4670. | 'முறையுடை எம்பியார் முடிந்தவா' எனாப் பறையிடு நெஞ்சினன், பதைக்கும் மேனியன், இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம் சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்; |
முறையுடை எம்பியார் முடிந்த ஆ - நீதிமுறையைத் தனக்கு உரிமையாகவுடைய என் தம்பி சடாயு இறந்தவாறு என்னே!எனா - என்று; பறை இடு நெஞ்சினன் - பறையடிப்பது போலத்துடிக்கின்ற நெஞ்சையுடையவனும்; பதைக்கும் மேனியன் - தவித்துத் துடிக்கும் உடம்பையுடையவனும்; இறையுடைக் குலிசம் வேல் எறிதலால் - தேவேந்திரன் தன் வச்சிரப் படையை வீசியெறிந்ததால்; முனம் சிறை அறும் மலை என - முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டுப்போன மலையைப் போல; செல்லும் செய்கையான் - செல்லும் செயலையுடையவனானான். முற்காலத்தில் மலைகள் இறகுள்ளனவாயிருந்து பறந்த மக்களின்மேல் விழுந்து அழித்ததால், இந்திரன் அவற்றின் சிறகுகளை அரிந்தான் என்பது புராணக் கதை. சிறகுகள் அறுபட்ட மலை சிறகுகள் கரிந்துவிட்ட சம்பாதிக்கு ஏற்ற உவமையாம். எம்பியார் - பால்வழுவமைதி (பாசத்தால் வந்தது); தம்பி இளையவனாதலால் எம்பி என்று இருப்பது முறை; 'ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்த்து வழு; தம்பியை நினைத்த பாசத்தால் எம்பியார் என அமைந்தது. 23 |