4671.'மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப்
படையுளர் ஆயினார்' பாரில் யார்?' எனா,
உடலினை வழிந்து போய், உவரி நீர் உக,
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்;

     மிடலுடை எம்பியை - வலிமையுடைய என்தம்பியை; வீட்டும் -
அழிக்கக் கூடிய; வெஞ்சினப் படையுளர் ஆயினார் - கொடிய
கோபத்தோடு தாக்கும் படைக்கலங்களைக் கொண்டவர்; பாரில் யார்? - இந்த
உலகத்தில் எவர் உள்ளனர்? எனா - என்று சொல்லி வருந்தி; உடலினை
வழிந்துபோய் -
உடம்பிலிருந்து கீழே விழுந்துபோய்; உவரி நீர் உக -
கடலில் சேருமாறு; கடலினைப் புரை உறும் அருவிக் கண்ணினான் -
அந்தப் பெரிய கடலைப் போல நீர்ப்பெருக்குடைய கண் களையுடையவனும்.

     தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைந்து சம்பாதி கடல்போலக்
கண்ணீரைப் பெருக்கினான் என்பது.

     உடலினை: உருபு மயக்கம்.                                  24