4672. | உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்; மழுங்கிய நெடுங் கணின் வழங்கும் மாரியான்; புழுங்குவான், அழுங்கினான; புடவிமீதினில், முழங்கி, வந்து, இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்; |
உழும் கதிர் மணி - சாணை பிடித்த ஒளிபொருந்திய மணிகளைக் கொண்டு செய்த; அணி உமிழும் மின்னினான் - அணிகலன்கள் ஒளிவிடுகின்ற மின்னலையுடையவனும்; மழுங்கிய நெடுங்கணின் - ஒளி மங்கிய தன் நீண்ட கண்களிலிருந்து; வழங்கும் மாரியான் - வழிகின்ற நீர்த்துளிகளையுடையவனும்; புழுங்குவான் அழுங்கினான் - துயரத்தால் மனம் வருந்துபவனாய் வாய்விட்டுக் கதறுபவனும்; புடவி மீதினில் - பூமியின்மேல்; முழங்கிவந்து - குமறிக் கொண்டே வந்து; இழிவது - கீழே இறங்குவதான; ஓர் முகிலும் போல்கின்றான் - ஒரு மேகத்தை ஒத்திருப்பவனும். மின்னியிடித்து நீரைச் சொரிகின்ற மேகம், இரத்தின அணிகலன்களால் ஒளி வீசிக் கொண்டும், வாயினால் கதறிக் கொண்டும், கண்ணீரைச் சொரிந்து கொண்டுமிருக்கின்ற சம்பாதிக்கு உவமையாம். இல்பொருள் உவமை. சம்பாதி பெரிய உருவத்துடன் பூமியின்மேல் நடந்து வருவதால் பூமியின் மேல் இழியும் மேகம் போன்றான் என்று குறித்தார். 25 |