சம்பாதியின் வருகையைக் கண்ட அனுமன் செயல்

4674. எய்தினன் - இருந்தவர்
      இரியல் போயினார்;
ஐயன், அம் மாருதி,
      அழலும் கண்ணினான்,
'கைதவ நிசிசர!
     கள்ள வேடத்தை!
உய்திகொல் இனி?' எனா
      உருத்து, முன் நின்றான்.

     எய்தினான் - (இவ்வாறு சம்பாதி அந்த வானர வீரர்கள் இருந்த
இடத்திற்கு) வந்து சேர்ந்தான்; இருந்தவர் இரியல் போயினார் - (அவனைக்
கண்டு) அங்கிருந்த அந்த வானரவீரர்கள் அஞ்சியோடி னார்கள்; ஐயன்
அம்மாருதி -
அறிவிற் சிறந்தவனான அந்த அனுமன் மட்டும்;அழலும்
கண்ணினான் -
(கோபத்தால்) நெருப்புப் போல் ஏரியும்
கண்களையுடையவனாய் (அந்தச் சம்பாதியை நோக்கி); கை தவநிசிசர -
வஞ்சனையுடைய அரக்கனே!கள்ள வேடத்தை - பொய் வேடம்
பூண்டவனே!இனி உய்திகொல் எனா - (என்முன் அகப்பட்ட நீ) தப்பிப்
பிழைப்பாயோ என்று; உருத்து - கோபித்து; முன் நின்றான் - அவனெதிரில்
நின்றான்.

     சம்பாதியின் பேருருவத்தைக் கண்டு மற்றைய வானர வீரர்கள்
அஞ்சியோட, அவனை இராவணன் சார்பினன் என்றே கருதி அனுமன்
கோபித்து, 'வஞ்சனை மிக்க அரக்கனே! இவ்வாறு கள்ளத்தனமாகப் பறவை
வடிவம் கொண்டு தப்பிப் பிழைக்கப் பார்க்கின்றாயோ' என்று கூறி அவனை
எதிர்த்து நின்றான் என்பது.

     கைதவம்: வஞ்சகம். வேடத்தை: முன்னிலைக் குறிப்பு வினைமுற்று.
நிசிசரர்: அரக்கர் (இரவில் சஞ்சரிப்பவர்). எருவை வேந்தன் (22),
செய்கையான் (23), கண்ணினான் (24), போல்கின்றான் (25), பொருவு
மேனியான் (26), உருத்து முன்னின்றான் என வினை முடிவு கொள்ளுதல்
வேண்டும்.                                                   27