4675.வெங் கதம் வீசிய மனத்தன், விம்மலன்,
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்,
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை,
இங்கித வகையினால், எய்த நோக்கினான்.

     (அனுமன் சம்பாதியை மேலும் நோக்கி) வெங்கதம் வீசிய மனத்தன் -
கொடிய கோபத்தை நீக்கிய மனத்தையுடையவனும் ; விம்மலன் -
(துக்கத்தால்) பொருமுகின்றவனும்; பொங்கிய சோரி நீர் பொழியும் -
பொங்கும் மழைபோல நீரைச் சொரிகின்ற; கண்ணினன் -
கண்களையுடையவனுமாயிருக்கின்றான் (ஆதலால், இவன்); சங்கையில் சழக்கு
இலன் -
மனத்திலே சிறிதும் குற்றம் இல்லாதவன்; என்னும் தன்மையை -
என்பதை; இங்கித வகையினால் - முகத்தின் குறிப்புகளினால்; எய்த
நோக்கினான் -
நன்றாக அறிந்து கொண்டான்.

     அனுமன், பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால்,
சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற
சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என்பதைத் தெளிந்தான் என்பது.

     இங்கித வகை: குறிப்பால் உணருந் தன்மை. சங்கை: மனம்; சழக்கு:
குற்றம்.                                                      28