சம்பாதி தன் வரலாறு உரைத்தல் 4677. | 'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின், உற்றதைப் பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால்' என்ன, மாருதி எதிர், எருவை வேந்தனும், தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேவினான்; |
(அது கேட்டு)மாருதி - அனுமன்; உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் - உன்னைப் பற்றி நீ உள்ளபடியே கூறினால்; பின்னை - பிறகு; யான் உற்றதை நிரப்புதல் - நான் நடந்த வரலாற்றை விரிவாகக் கூறுவது; பிழைப்பு இன்றாகும் - தவறு இல்லாததாகும்; என்ன - என்று (சம்பாதியை நோக்கிக்) கூற; எதிர் - எதிரே நின்ற அனுமனிடம்; எருவை வேந்தனும் - கழுகரசனான சம்பாதியும்; தன்னை ஆம் தன்மையை - தன்னைப பற்றிய வரலாற்றை; சாற்றல் மேயினான் - சொல்லத் தொடங்கினான். ஆல் : ஈற்றசை. பிழைப்பு - தவறு. முதலடி முற்றுமோனையாகவுள்ளது. 30 |