4678.'மின் பிறந்தாலென
      விளங்கு எயிற்றினாய்!
என், பிறந்தார்க்கு இடை
      எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை
      பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன்' என
      முடியக் கூறினான்.

     மின் பிறந்தாலென - (சம்பாதி அனுமனை நோக்கி) மின்னல்
தோன்றியது போல; விளங்கு எயிற்றினாய் - விளங்குகின்ற பற்களை
யுடையவனே! பிறந்தார்க்கு இடை எய்தலாத என் - உடன் பிறந்தவர்
பொருட்டுச் சோர்தல் அடையாத நிலை ஏது?என் பின்பிறந்தான் -
எனக்குப் பின் பிறந்தவனாகிய; துணை பிரிந்த - (என்) சகோதரனைப் பிரிந்த;
பேதையேன் -
எளியவனாகிய நான்; முன் பிறந்தேன் - (அந்தச்
சடாயுவுக்கு) அண்ணனாகப் பிறந்தேன்; என - என்று; முடியக் கூறினான் -
தன் வரலாற்றை விளங்கக் கூறினான்.

     சடாயு என்பவன் தன் தம்பி; நான் அவனுக்கு முன் பிறந்தவன் என்பது.

     'இளையவன் இறக்க மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கின்றேனே'
என்ற இரக்கம் தோன்றுமாறு 'என் பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன்' என்றான் சம்பாதி.  உடன்பிறந்தவர்கள் துன்பமுற நேர்ந்தால்
சோர்வடையாத நிலை உண்டோ என்று சம்பாதி கேட்டான். சடாயுவின்
மரணத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள சோர்வைச் சம்பாதி இவ்வாற
புலப்படுத்துகிறான். இடை(தல்) - சோர்தல். என்பு: ஆகுபெயர்.           31