அனுமன், சடாயு இறந்தமை உரைத்தல் 4679. | கூறிய வாசகம் கேட்ட, கோது இலான் ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா ஏறினன், உணர்த்தினன், 'இகல் இராவணன் வீறிய வாளிடை விளிந்தது ஆம்' என்றான். |
கூறிய வாசகம் கேட்ட - சம்பாதி சொன்னவற்றைக் கேட்ட; கோது இலான் - குற்றமற்றவனான அனுமன்; ஊறிய துன்பத்தின் உவரியுள்புகா - மிக்க துன்பமாகிய கடலினுள் மூழ்கி; ஏறினான் - அதிலிருந்து ஒருவாறு கரையேறினவனாகி; இகல் இராவணன் - (சடாயுவோடு) போர் புரிந்த இராவணன்; வீறிய வாளிடை - வீசிய வாளினால்; விளிந்தது ஆம் - உன் தம்பியின் மரணம் நேர்ந்ததாகும்; என்றான் உணர்த்தினன் - என்று தெரிவித்தான். சம்பாதியின் சொல் மனத்தைக் கரையச் செய்ததால் அதைக் கேட்ட அனுமன் துயர்க் கடலிலே மூழ்கிப்பின் ஒருவாறு தெளிந்தான் என்பது. வீறிய வாள்: இராவணனுக்குச் சிவன் தந்த சந்திரகாசமென்னும் வாள்; எனவே, பிறிதொன்றற்கு இல்லாத சிறப்புடையது. புகா: செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 32 |