சம்பாதி புலம்பல் 4680. | அவ் வுரை கேட்டலும், அசனி ஏற்றினால் தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்; வெவ் உயிரா உயிர் பதைப்ப, விம்மினான்; இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்: |
அவ் உரை கேட்டலும் - (அனுமன் கூறிய) அந்தச் சொற்களைக் கேட்டதும் (சம்பாதி); அசனி ஏற்றினால் - பேரிடியினால்; தவ்விய கிரி என- சிதைந்த மலை போல; தரையில் வீழ்ந்தனன் - தரைமீது விழுந்தான்; வெவ் உயிரா - வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு; உயிர் பதைப்ப - உயிர் துடிக்க; விம்மினான் - தேம்பி வருந்தியவனாகி; இவ்உரை இவ்உரை - இந்த இந்தச் சொற்களை; எடுத்து இயம்பினான் - எடுத்து எடுத்துச் சொல்லிப் புலம்பினான். ஏறு: சிறந்ததையும், பெரியதையும் 'ஏறு' என்றல் மரபு. கீழே விழுதலும், வெப்பமாகப் பெருமூச் செறிதலும், உயிர் பதைத்தலும், விம்முதலும் துயரத்தின் மெய்ப்பாடுகள். இவ்வுரை இவ்வுரை என்ற அடுக்கு: சோகத்தின் பலவற்றைக் கூறுவதைக் குறிக்கும். தவ்வுதல்:சிதைதல். 33 |