4682. | 'மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு; உலையா நீடு அறம் இன்னும் உண்டுஅரோ; நிலை ஆர் கற்பமும் நின்றது; இன்று நீ இலையானாய்; இது என்ன தன்மையோ? |
மலரோன் நின்றுளன் - (திருமாலின் நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரமன் இன்னும் அழியாது இருக்கின்றான்; மண்ணும் விண்ணும் உண்டு - பூமியும் வானமும் உள்ளன; உலையா நீடு அறம் - அழியாது வளரும் தருமமும்; இன்னும் உண்டு - இன்னும் நிலைபெற்றுள்ளது; நிலை ஆர் கற்பமும் - நிலை பொருந்திய பிரமகற்பம் என்ற காலமும்; நின்றது - இன்னும் முடிவடையாது உள்ளது (ஆனால்) இன்று நீ இலை ஆனாய் - இன்றோ நீ மாத்திரம் இல்லாது அழிந்தாய்; இது என்ன தன்மையோ - இது என்ன முறையோ? அரோ: ஈற்றசை நீண்ட ஊழிக் காலம் வரை நிலைத்தற்குரிய நீ இறந்தாயே எனச் சம்பாதி இரங்கியவாறு. பிரமனும், மண்ணும், விண்ணும், அறமும், கற்ப காலமும் அழியுமானால் நீயும் அழிவது நியாயமாகும்; அவை அழியாதிருக்க நீ மட்டும் அழிந்தது முறையாகாது என்பது சம்பாதி கருத்து. ஓகாரம்: எதிர்மறை; ஐயமும் ஆம். கற்பம்: பிரமகற்பம். 35 |