4683.'உடனே, அண்டம் இரண்டும்
      முந்து உயிர்த்து -
இடு அந் நாள் வந்து
      இருவேமும் எய்தி, யான்
விட, நீயே தனிச்
      சென்ற வீரமும்
கடனே; - வெங்
      கலுழற்கும் மேன்மையாய்!

     வெங் கலுழற்கும் மேன்மையாய் - வலிமை மிக்க கருடனுக்கும்
மேம்பட்டவனே!அம் முந்து நாள் - முன்னொரு காலத்தில்; அண்டம்
இரண்டும் உயிர்த்திடும் -
இரண்டு முட்டைகள் உண்டாக்க; உடனே
இருவேமும் வந்து எய்தி -
ஒருவர்பின் ஒருவராக நாம் இருவரும் உடன்
பிறப்பாகப் பிறந்து; யான் விட - (இப்போது) என்னை விட்டுப் பிரிந்து; நீயே
தனிச் சென்ற வீரமும் -
நீ மட்டும் தனியாக இறந்து போன வீரச் செயலும்;
கடனே -
முறையோ?

     நீ வீரத்தால் இறந்தது சிறந்ததாயினும் என்னைத் தனியே விட்டுச்
சென்றது தகுதியாகாது என்பான் 'யான் விட' என்றும், இராவணனுடன் போர்
செய்து விழுப்புண் பட்டு இறந்தானாதலால் 'சென்ற வீரமும்' என்றும்
கூறினான்.

     அருணனுக்கு அரம்பை யென்னும் தேவமாதிடம் தோன்றிய
இருமுட்டைகளில் பிறந்தவர் சம்பாதியும் சடாயுவும் என்பர்.

     நீயே - ஏகாரம் பிரிநிலை.  கடனே - ஏகாரம் வினாப் பொருளில்
வந்தது. அண்டம் - முட்டை.                                     36