4684. | 'ஒன்றா மூன்று உலகத்துளோரையும் வென்றான்என்னினும் வீர! நிற்கு நேர் நின்றானே, அவ் அரக்கன்! நின்னையும் கொன்றானே! இது என்ன கொள்கையோ?' |
வீர - வீரனே! (இராவணன்); ஒன்றா - (தனக்கு) இணங்கி வராத; மூன்று உலகத்து உளோரையும் - சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவலகங்களில் உள்ளவர் அனைவரையும்; வென்றான் என்னினும் - வென்றான் என்றாலும்; அவ் அரக்கன் நிற்கு நேர் நின்றானே - (போரில்) அந்த அரக்கனாகிய இராவணன் உனக்கு எதிராக வந்து நின்றானா? நின்னையும் கொன்றானே - உன்னையும் கொன்றானா? இது என்ன கொள்கையோ - இது என்ன வியப்பான நிகழ்ச்சியோ? மூவுலகத்தையும் வென்ற அந்த இராவணனைவிட நீ மிக்க வலியவனாதலால் அவன் உன்னை எதிர்த்தான் என்பதும், கொன்றான் என்பதும் நம்பத்தக்க நிகழ்ச்சிகளாக இல்லையே என்றான் சம்பாதி. நின்றானே கொன்றானே: ஏகாரங்கள் வியப்பொடு வந்த வினாக்கள். கொள்கை: கோட்பாடு, சூழ்ச்சியும் ஆம். 37 |