4685. | என்று என்று ஏங்கி, இரங்கி, இன்னலால் பொன்றும் தன்மை புகுந்தபோது, அவற்கு ஒன்றும் சொற் கொடு உணர்ச்சி நல்கினான் - வன் திண் தோள் வரை அன்ன மாருதி. |
என்று என்று - (சம்பாதியானவன்) என்று பலவிதமாகக் கூறி; ஏங்கி இரங்கி - மனம் தளர்ந்த வருந்தி; இன்னலால் - துன்பத்தால்; பொன்றும் தன்மை புகுந்தபோது - இறக்கும் நிலையடைந்த போது; அவற்கு - அந்தச் சம்பாதிக்கு; வன்திண் வரை அன்ன தோள் மாருதி - மிக வலிய மலை போன்ற தோள்களையுடைய அனுமன்; ஒன்றும் சொல்கொடு - ஏற்ற சொற்களைக் கொண்டு; உணர்ச்சி நல்கினான் - தேறுதல் கூறினான். என்று என்று - அடுக்கு - துயரத்தால் வந்த எண்ணுப் பொருளது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி. ஒன்றும் சொல்: துயரத்தைத் தணிப்பதற்கேற்ற சொற்கள். அனுமன் சொல்லின் செல்வனாதலால் ஒன்றும் சொற்கொடு உணர்ச்சி நல்கினான் என்றார். 38 |