4687. | 'எம் கோமான், அவ் இராமன், இல் உளாள், செங்கோலன் மகள், சீதை செவ்வியாள், வெங் கோல் வஞ்சன் விளைத்த மாயையால், தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்; |
எம் கோமான் அவ்இராமன் - (அது கேட்ட அனுமன்) எங்கள் தலைவனாகிய அந்த இராமபிரானின்; இல் உளாள் - மனைவியாக இருப்பவளும்; செங்கோலன் மகள் - நீதி தவறாத ஆட்சியையுடைய சனகமன்னன் திருமகளும்; செவ்வியாள் - நல்லிலக்கணங்களும் பண்பும் நிறைந்தவளுமான; சீதை - சீதையானவள்; வெங்கோல் வஞ்சன் - கொடுங்கோலையுடைய வஞ்சகனான இராவணன்; விளைத்த மாயையால் - செய்த சூழ்ச்சியால்; தன் கோனை - தன் நாயகனான அந்த இராமபிரானை; பிரிவுற்ற தன்மையாள் - பிரிந்த தன்மையையுடைவளானாள். வெங்கோல் வஞ்சன் விளைத்த மாயை: மாயமான் காரணமாக இராம இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்தது. இல் உளான்: வீட்டிலிருந்து கணவனுக்கு வேண்டிய தொழிலைச் செய்பவள்; மனைவி - இடவாகுபெயர். 40 |