4688.'கொண்டு ஏகும் கொலை
      வாள் அரக்கனைக்
கண்டான் நும்பி;
      அறம் கடக்கலான்,
''வண்டு ஆர் கோதையை
      வைத்து நீங்கு'' எனா,
திண் தேரான் எதிர்
      சென்று சீறினான்.

     கொண்டு ஏகும் - சீதையைக் கவர்ந்து செல்லும்; கொலை வாள்
அரக்கனை -
கொலை செய்யும் வாளேந்திய இராவணனை; நும்பி
கண்டான்-
உன் தம்பி பார்த்தான்; அறம் கடக்கலான் - தருமநெறி
தவறாதவனான அவன்; வண்டு ஆர் கோதையை - வண்டுகள் மொய்க்கும்
கூந்தலையுடைய அச் சீதையை; வைத்து நீங்கு - விட்டுவிட்டு அப்பாலே
செல்; எனா - என்று கூறி; திண்தேரான் எதிர் சென்று -வலிய
தேரையுடைய அந்த இராவணன் எதிரே சென்று; சீறினான் - மனங் கொதித்து
எதிர்த்தான்.

     அறங் கடக்கலான்: இந்த அடைமொழி பிறர் மனைவியைக் கவர்வதைக்
கண்டு மனங்கொதிப்பதற்கு ஏற்றவன் என்ற கருத்தைப் புலப்படுத்தும்.

     அறங் கடவாத சடாயுவை அறநெறி நின்றுளோர்க் கெலாம் மாணியை' -
(3449) என முன்னும் கூறினார்.  சொல்லிய அறநெறி தொடர்ந்து தோழமை
நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியை' - (3451) என்றதும் காண்க.

     கண்டான்:முற்றெச்சம்.                                     41