4689. | 'சீறி, தீயவன் ஏறு தேரையும் கீறி, தோள்கள் கிழித்து அழித்த பின், தேறி, தேவர்கள் தேவன் தெய்வ வாள் வீற, பொன்றினன் மெய்ம்மையோன்' என்றான். |
மெய்ம்மையோன் - எப்பொழுதும் அறவழியிலேயே நிற்கும் சடாயு; சீறி - கோபித்து; தீயவன் ஏறு தேரையும் கீறி - கொடியவனான அந்த இராவணன் தேரையும் அழித்து; தோள்கள் கிழித்து - (அவன்) தோள்களையும் பிளந்து; அழித்தபின் - அவனுக்குத் தோல்வியை உண்டாக்கின பிறகு; தேறி - (இராவணன்) சடாயுவை வெல்லும் நெறியைத் துணிந்து; தேவர்கள் தேவன் - தேவர்களுக்கும் தேவனான சிவபெருமான்; தெய்வ வாள் வீற - (தனக்கு அளித்த) தெய்வத் தன்மையுள்ள சந்திரகாசம் என்னும் வாள் வெற்றிபெற; பொன்றினன் - சடாயு (சிறகுகள் அறுபட்டு) உயிர்மாய்ந்தான்; என்றான் - என்று (அனுமன்) கூறி முடித்தான். சடாயு இராவணனைத் தன் மூக்கினாலும் நகங்களாலும் சிறகுகளாலும் பலவாறு துன்புறுத்தி, இறுதியில் அந்தக் கொடியவனது தெய்வ வாளால் உயிர் மாய்ந்தான் என்றான் அனுமன் என்பது. மும்மூர்த்திகளுள் ஒருவனாதலால் சிவன் 'தேவர்கள் தேவன்' எனப்பட்டான். வீறு என்ற சொல் பிறிதொன்றுக்கும் இல்லாத சிறப்பினைக் குறிக்கும். சிவபெருமான் கொடுத்தருளிய வாள் வீறுபெற (சிறப்பான வெற்றிபெற) என்றது அவ்வாளின் ஒப்பரிய சிறப்பினைப்புலப்படுத்திற்று. 42 |