சம்பாதி சடாயுவைப் பாராட்டுதல் 4690. | விளித்தான் அன்னது கேட்டு 'மெய்ம்மையோய்! தெளித்து ஆடத் தகு தீர்த்தன்மாட்டு, உயிர் அளித்தானே! அது நன்று! நன்று!' எனாக் களித்தான் - வாரி கலுழ்ந்த கண்ணினான். * |
விளித்தான் - (இவ்வாறு) அனுமன் கூறினான்; அன்னது கேட்டு - அச் சொற்களைக் கேட்டு; வாரி கலுழ்ந்த கண்ணினான் - நீரைச் சொரியும் கண்களையுடையவனான சம்பாதி (அனுமனை நோக்கி); மெய்ம்மையோய் - உண்மை நெறியில் நிற்பவனே; தெளித்து ஆடத்தகு - மனந் தெளிந்து அனுபவித்தற்குரிய; தீர்த்தன் மாட்டு - புனிதனாகிய இராமபிரான் பொருட்டு; உயிர் அளித்தானே - (என் தம்பியான சடாயு) உயிரையும் கொடுத்தானே! அது நன்று நன்று - அந்தச் செயல் மிகவும் நல்லது!எனாக் களித்தான் - என்று மனமகிழ்ந்தான். தெளித்து ஆடத்தகு தீர்த்தன் - முழுமுதற் கடவுள் என்று உறுதிகொண்டு சரணமடைவதற்கு ஏற்ற புண்ணிய மூர்த்தி. தெளிந்து என்ற சொல் எதுகை நோக்கி தெளித்து என வலித்தல் விகாரமாயிற்று. தீர்த்தன்மாட்டு உயிரளித்தான்: சீதையை மீட்டலும் இராம காரியமாகும் என்பது கருதி. அளித்தானே - நன்று நன்று: ஏகாரமும் அடுக்கும் உவகைப் பொருளன. 43 |