சம்பாதி நீர்க்கடன் செய்து வானரரை நோக்கி மொழிதல்

4693. என்று என்று ஏங்கி, இரங்கி, இன்புனல்
சென்று, அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்,
வன் திண்தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான்:   *

     என்று என்று ஏங்கி இரங்கி - என்று பலவாறு ஏக்கங் கொண்டு
புலம்பி; இன்புனல் சென்று - இனிய நீர்நிலைக்குச் சென்று; அங்கு ஆடுதல்
செய்து -
அதில் நீராடுதல் செய்து; தீர்ந்த பின் - முடித்த பிறகு; வல்
திண்தோள்வலி -
மிக்க திண்ணிய தோள் வலிமையில்; மாறு இலாதவன் -
ஒப்பற்றவனாகிய சம்பாதி; துன்றும் தாரவர்க்கு - அடர்த்தியான மாலையைத்
தரித்த வானர வீரர்களை நோக்கி; இன்ன சொல்லினான் - பின் வருமாறு
கூறலானான்.

     சம்பாதி ஒப்பற்ற வலிமையுடையவன் என்பதால் 'தோள்வலி
மாறிலாதவன்' என்றார்.

     என்று என்று - அடுக்கு, துன்பத்தின் மிகுதியைக் காட்டுவது.       46