4695.'எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; - நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!'

     நல்ல சொல் வல்லீர் - (மேலும், சம்பாதி அந்த வானர வீரர்களை
நோக்கி) இன்சொல் கூறுகின்றவரும்; வாய்மை வளர்க்கும் மாண்பினீர் -
சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்றவர்களுமாகிய வானர வீரர்களே!
எல்லீரும் -
நீங்கள் அனைவரும்; அவ்இராம நாமமே சொல்லீர் - அந்த
'இராம' என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக!சொல்ல -
(அவ்வாறு என்னருகில்) சொல்வதனால்; எனக்கு - எனக்கு; ஒர் சோர்வு
இலா -
ஒரு சிறிதும் தாழ்வில்லாத; நல் ஈரப் பயன் - நல்ல (அந்த
இராமனின்) அருளாகிய பயன்; நண்ணும் - கைகூடும்.

     'என்றான்' என்று அடுத்த செய்யுளோடு தொடர்ந்து முடியும்.  இராம
நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி.  கம்பர்
படைப்பு; வான்மீகத்தில் இல்லை.                                 48