4697.சிறை பெற்றான், திகழ்கின்ற மேனியான்,
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் -
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான்.

     ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் - புகையோடு கூடிய நெருப்பைக்
கக்கும் வாளானது; உறை பெற்றால் எனல் ஆம் - ஓர் உறையைப் பெற்றது
என்று சொல்லத் தக்க; உறுப்பினான் - அலகினைப் பெற்றவனாகிய சம்பாதி;
திகழ்கின்ற மேனியான் -
விளங்கும் உடம்பையுடையவனாய்; முறை பெற்று
ஆம் -
வரிசையாகப் பொருந்தி; உலகு எங்கும் மூடினான் - உலகங்கள்
எல்லாவற்றிலும் பரவித் தன் சிறகுகளால் மூடியவனாய்; நிறை பெற்று -
வலிமை பெற்று; சிறை பெற்றான் - (தனது கரிந்துபோன) சிறகுகள்
(முன்போல) வளரப் பெற்றான்.

     கருகிப்போன சிறகுகள் மீண்டும் வளர்ந்தன, உலகையே மூடும்
அளவுக்கு பெரிய சிறகுகள வளர்ந்தன என்பதாம்.  முறை பெற்று ஆம்
உலகு- ஒன்றன்பின் ஒன்றான வரிசையில் அமைந்த உலகங்கள்.

     மூடுதல் - உள்ளடக்கிக் கவிந்து கொள்ளுதல்.  அங்கம் இங்கே அலகு;
வாயிடை இணைந்த அலகுக்கு உறையிட்ட வாள்உவமையாயிற்று.        50