4699. அன்னானைக் கடிது அஞ்சலித்து, 'நீ
முன் நாள் உற்றது முற்றும் ஓத' எனச்
சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற,
தன்னால் உற்றது தான் விளம்புவான்:

     அன்னானைக் கடிது அஞ்சலித்து - (வானர வீரர்கள்) சிறகு பெற்ற
அந்தச் சம்பாதியை விரைந்து கை கூப்பி வணங்கி; முன்னால் உற்றது -
முன்காலத்து நடந்த வரலாறு; நீ முற்றும் ஓது - நீ முழுவதையும் கூறுவாய்;
எனச் சொன்னார் -
என்று வேண்டினார்கள்; சொற்றது சிந்தை தோய்வுற -
அவர்கள் கூறியது மனத்தில் பதிய; தன்னால் உற்றது - தனக்கு நேர்ந்ததை
(இறகு கரிந்த காரணத்தை); தான் - அந்தச் சம்பாதி; விளம்புவான் -
(பின்வருமாறு) சொல்வானாயினான்.

     சம்பாதியை வானரர்கள் அஞ்சலித்தது -அவன் இராமநாமத்தின்
பெருமையைத் தமக்குத் தெரிவித்தவனாதலாலும், இராமனுக்குப் பெரிய தந்தை
முறையாகி அவனது திருவருளைப் பெற்றவனாதலாலும், மிகவும் வயது
முதிந்தவனாதலாலும் என்பது.

     தன்னால் - உருபு மயக்கம்.                                 52