4702.'முந்திய எம்பி மேனி முருங்கு
      அழல் முடுகும் வேலை,
''எந்தை! நீ காத்தி'' என்றான்;
      யான் இரு சிறையும் ஏந்தி
வந்தெனன் மறைத்தலொடும், மற்று
      அவன் மறையப்போனான்;
வெந்து மெய், இறகு
      தீந்து, விழுந்தெனன், விளிகிலாதேன்.

     முந்திய எம்பி மேனி - எனக்குமுன் மேலே சென்ற என் தம்பியான
சடாயுவின் உடலை; முருங்கு அழல் - எரிக்குந் தன்மையுள்ள நெருப்பு;
முடுகும் வேலை -
விரைவாகச் சுட்டெரிக்குங் காலத்தில் (அந்தச் சடாயு
என்னை நோக்கி); எந்தை நீ காத்தி என்றான் - என் தந்தையே! நீ
என்னைக் காப்பாற்று என்று வேண்டினான்; யான் - நானும்; இரு சிறையும்
ஏந்தி -
(அவனுக்கு மேலே சென்று) பெரிய என் இரண்டு சிறகுகளையும்
பரப்பி; வந்தனென் மறைத்தலோடும் - வந்து (அவன்மேல் வெப்பம்
தக்காதபடி) மறைக்கவே; அவன் மறையப் போனான் - அந்தச் சடாயு (என்
சிறகு நிழலில்) மறைந்து சென்றான் (அதனால்); மெய் வெந்து - என் உடல்
வெந்த; இறகு தீந்து - இறகுகள் கருகி; விளிகிலாதேன் - என் உயிர்
அழியாதவனாக; விழுந்ததென் - தரையில் விழுந்தேன்.

     என்னைவிட உயரமாகப் பறந்து சென்ற சடாயு சூரியதேவன் கோபித்துச்
செலுத்திய வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் தன்னைக் காப்பாற்றுமாறு என்னை
வேண்டிக் கொள்ள, அதனால் அவனை என் சிறகின் கீழே வரச் செய்து
அவனுக்குமேலே நான் பறந்து செல்ல அவனும் அவ்வாறே வந்து தப்பினான்;
நான் அந்தக் கதிரவனது வெப்பத்தைத் தாங்கமுயாமல் இறகு தீய்ந்து கீழே
விழுந்தேன் என்று சம்பாதி கூறினான் என்பது.  'தமையன்
தந்தையோடொப்பான்' என்பதால் 'எந்தை' என விளிக்கப்பட்டான்.

     முருங்கு அழல்: சுட்டு அழிக்கும் நெருப்பு: முடுகுதல்: விரைதல் மற்று:
அசை.                                                        55