4704. | 'எம்பியும் இடரின் வீழ்வான், ஏயது மறுக்க அஞ்சி, அம்பரத்து இயங்கும் யாணர்க் கழுகினுக்கு அரசன் ஆனான்; நம்பிமீர்! ஈது என் தன்மை? நீர் இவண் அடைந்தவாற்றை, உம்பரும் உவக்கத் தக்கீர்! உணர்த்துமின், உணர' என்றான். |
உம்பரும் உவக்கத் தக்கீர் - தேவர்களும் மகிழத்தக்க தொழிலையுடையவர்களாகிய; நம்பிமீர் - சிறந்த வானர வீரர்களே!இடரின் வீழ்வான் - (என் துன்பத்தைக் கண்டு) துயரத்தில் மூழ்கியவனாகிய; எம்பியும்- என் தம்பியான சடாயுவும்; ஏயது மறுக்க அஞ்சி - (நான்) ஏவியதைமறுக்க அஞ்சியவனாய்; அம்பரத்து இயங்கும் - வானத்தில் சஞ்சரிக்கின்ற; யாணர்க் கழுகினுக்கு - வலிய கழுகுகளுக்கு; அரசன் ஆனான் - அரசன்ஆயினான்; ஈது என் தன்மை - இதுவே எனது வரலாறு; நீர் இவண்அடைந்த ஆற்றை - நீங்கள் இங்கு வந்த வரலாற்றை; உணர உணர்த்துமின்- (நான்) உணரும்படி கூறுக; என்றான் - என்று கூறிமுடித்தான். யாணர்: அழகு (புதுமை). இங்கு 'வலிமை' என்று பொருள்படும். 57 |