சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்தல்

4705. என்றலும், இராமன் தன்னை
      ஏத்தினர் இறைஞ்சி, 'எந்தாய்!
''புன் தொழில் அரக்கன் மற்று
      அத்தேவியைக் கொண்டு போந்தான்,
தென் திசை'' என்ன உன்னித்
      தேடி நாம் வருதும்' என்றார்;
'நன்று நீர் வருந்தல் வேண்டா;
     நான் அது நவில்வென்' என்றான்.

     என்றலும் -  என்ற சம்பாதி வினாவியவுடனே (அவ் வானரர்);
இராமன்தன்னை ஏத்தினர் இறைஞ்சி -
இராமபிரானைத் துதித்து வணங்கி
(சம்பாதியை நோக்கி); எந்தாய் - எம் தந்தை போன்றவனே!புன்தொழில்
அரக்கன் -
இழிதொழிலைச் செய்யும் அரக்கனாகிய இராவணன்; அத்
தேவியை -
அந்த இராமபிரான் தேவியான சீதையை; தென் திசை -
தென்திசை வழியாக; கொண்டு போந்தான் என்ன - கொண்டு சென்றான்
என்று; உன்னி - நினைத்து; நாம் தேடி வருதும் என்றார் - நாங்கள்
அச்சீதையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று கூறினர்; நன்று - (அது
கேட்ட சம்பாதி) நல்லது; நீர் வருந்தல் வேண்டா - நீங்கள் வருந்தாதீர்கள்;
நான் அது நவில்வென் -
நான் இதுபற்றி அறிந்துள்ளதைக் கூறுவேன்;
என்றான் -
என்று கூறத் தொடங்கினான்.

     பிறர் மனைவியைக் கவரும் தீக்குண முடையவனாதலால் இராவணனைப்
'புன் தொழிலரக்கன்' என்றார்.

     மற்று: அசை.                                            58