4707. | 'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி கடல் இலங்கை; அவ் ஊர், பாச வெங்கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்; நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள் ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது?' என்றான். |
ஒலி கடல் இலங்கை - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அந்த இலங்கையானது; ஓசனை ஒரு நூறு உண்டு - (இங்கிருந்து) நூறு யோசனை தூரத்திலுள்ளது; அவ்ஊர் - அந்த இலங்கையிடத்து; வெம் பாசக் கரத்துக் கூற்றும் - கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும்; கட் புலன் பரப்ப அஞ்சும் - (தனது) கண்ணால் ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுவான்; நீசன் அவ் அரக்கன் சீற்றம் - இழி செயல் செய்யும் அந்த இராவணனது கோபமோ; நெருப்புக்கும் நெருப்பு - நெருப்பையும் அழிக்க வல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது; ஏசு அறுங் குணத்தீர் - பழிப்பற்ற நண்பண்புடையவர்களே!நீங்கள் - ; சேறல் - (அங்கே) செல்லுவது; எப்பரிசு இயைவது - எவ்வாறு முடியுமோ?என்றான் - என்று (சம்பாதி) கூறினான். ஆல்: ஈற்றசை. இலங்கையின் நிலையைப் பார்த்தால் எவ்வாறு அங்கே சென்று சீதையைக் காண்பது என்று திகைக்கிறான் சம்பாதி. பாசம்: கயிற்று வடிவுடைய படைக்கருவி; யமனுக்கு உரியது. 60 |