4709. | 'எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று, அவ்இலங்கை மூதூர்; வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மை சொல்லீரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி, மீள்திர்; அல்லீரேன், என் சொல் தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா! |
அவ் இலங்கை மூதூர் - பழமையான அந்த இலங்கைக்கு; எல்லீரும் - நீங்கள் எல்லோரும்; சேறல் என்பது - (ஒருமிக்கப்) போய்ச் சேர்வது என்பது; எளிது அன்று - எளிய செயலில்லை; வல்லீரேல்- (ஆனால்) திறமைமிக்கவராக இருந்தால்; ஒருவர் ஏகி - (உங்களுக்குள்) வல்லமையுடைய ஒருவர் மட்டும் (தனித்துச்) சென்று; அவண் மறைந்து ஒழுகி - (அங்குள்ளவர்கள் அறியமுடியாதபடி) அங்கே மறைந்து (சீதையைத் தேடும்) செயல்புரிந்து; வாய்மை சொல்லீரே - இராமன் கூறிய உண்மை மொழிகளைச் சொல்லியவர்களாய்; தோகையைத் தெருட்டித் துயரை நீக்கி - சீதைக்குத் தெளிவூட்டித் துன்பத்தைப் போக்கி; மீள்திர் - திரும்புங்கள்; அல்லீரேல் - இல்லாவிட்டால் (உங்களில் ஒருவர் போகவில்லையென்றால்); என் சொல் தேறி - நான் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து; அழகற்கு உணர்த்துமின் - அழகுள்ள அந்த இராமபிரானிடம் (சீதை இலங்கையில் இருப்பதைத்) தெரிவியுங்கள். அம்மா: அசை. 'அம்ம' என்பதன் நீட்டல. எல்லீரும்: முன்னிலைப் பன்மைப் பெயர். சொல்லீர் - முற்றெச்சம். 62 |