வானரரிடம் விடைபெற்றுச் சம்பாதி விசும்பில் செல்லுதல் 4710. | காக்குநர் இன்மையால், அக் கழுகுஇனம் முழுதும் கன்றி, சேக்கை விட்டு, இரியல்போகித் திரிதரும்; அதனைத் தீர்ப்பான் போக்கு எனக்கு அடுத்த, நண்பீர்! நல்லது புரிமின்' என்னா, மேக்கு உற விசையின் சென்றான், சிறையினால் விசும்பு போர்ப்பான். |
காக்குநர் இன்மையால் - (தம்மைப்) பாதுகாப்பவர் இல்லாமையால்; அக்கழுகு இனம் முழுதும் - அந்தக் கழுகுக் கூட்டங்கள் அனைத்தும்; கன்றி - வருத்தமுற்று; சேக்கை விட்டு - (தம்) இருப்பிடங்களை விட்டு; இரியல் போகி - நிலைகெட்டுத் தடுமாறிப் போய்; திரிதரும் - அலைந்து வாடும்; அதனைத் தீர்ப்பான் - அத் துயரத்தை நீக்கும் பொருட்டு; போக்கு எனக்கு அடுத்த - போவது நான் செய்யத்தக்க செயலாகும்; நண்பீர் - நண்பர்களே!நல்லது புரிமின் - (நான் கூறிய இரண்டனுள்) நன்மைதரக் கூடியதைச் செய்யுங்கள்; என்னா - என்று கூறி; சிறையினால் விசும்பு போர்ப்பான் - (தன்) சிறகுகளால் வானத்தை மறைப்பவனாகிய அச் சம்பாதி; மேக்கு உற - மேலே பொருந்த; விசையில் சென்றான் - விரைவாகப் பறந்து போனான். 'இது வரையில் சடாயுவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கழுகுகள் அச் சடாயு இறந்ததால் பாதுகாப்பாரில்லாமல் எளியவற்றை வலியவை வாட்ட. நிலைகெட்டு வருந்தும்; ஆதலால், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நான் விரைந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான் செல்லுகின்றேன்; நீங்கள் நான் சொல்லியவற்றுள் ஏற்றதைச் செய்யுங்கள்' என்று கூறிச் சம்பாதி வான்வழியாகப் பறந்து சென்றான் என்பது. சேக்கை -பறவைகளின் கூடு. 63 |