4712.'சூரியன் வெற்றிக் காதலனோடும்
      சுடர் விற் கை
ஆரியனைச் சென்றே தொழுது,
     உற்றது அறைகிற்பின்,
சீர் நிலை முற்றும்; தேறுதல்
      கொற்றச் செயல் அம்மா;
வாரி கடப்போர் யாவர்?' என
      தம் வலி சொல்வார்;     *

     சூரியன் - கதிரவனின்; வெற்றிக் காதலனோடு்ம் - வெற்றியோடு
விளங்கும் மைந்தனான சுக்கிரீவனோடும்; சுடர் விற்கை ஆரியனை -
ஒளிபொருந்திய வில்லைக் கையிற் கொண்டவனான சிறந்த இராமனையும்;
சென்று தொழுது -
(பணியை முடிக்காமல்) போய் வணங்கி; உற்றது
அறைகிற்பின் -
நிகழ்ந்த செய்திகளைச் செல்வோமானால்; சீர்நிலை முற்றும்
-
சிறந்த (நமது) கடமை ஒருவாறு முடிவுபெறும்; (ஆயினும்) தேறுதல் -
(நாமே கடல் கடந்து சீதையுள்ள இடத்தைக் கண்டு) தெளிவது; கொற்றச்
செயல் -
வீரச் செயலாகும்; (ஆதலால்)வாரி கடப்போர் யாவர் - கடலைக்
கடக்கின்ற வல்லமையுள்ளவர் நம்மிலே யார் உள்ளார்; என - என்று சொல்லி;
தம் வலி சொல்வார் -
தத்தம் வலிமையை எடுத்துக் கூறலானார்கள்.

     சீதையை நேரிலே கண்டு மீண்டு செய்தி தெரிவித்தலே சிறந்த
தென்பதைக் குறிக்கும்.

     வாரி: கடல்; அம்மா : வியப்பிடைச் சொல். ஆரியன்:
பெருமைக்குரியவன். இராமபிரானை ஆரியன் என்று குறிப்பது இந்நூலில்
பெருவழக்காகும்.                                                2