நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் தம் இயலாமை கூறல்

4713.'மாள வலித்தேம்; என்றும்
      இம்மாளா வசையோடும்
மீளவும் உற்றேம்; அன்னவை
      தீரும் வெளி பெற்றேம்;
காள நிறத்தோடு ஒப்பவர்
      மாய, கடல் தாவுற்று,
ஆளும் நலத்தீர்! ஆளுமின், எம்
      ஆர் உயிர் அம்மா!'

     மாள வலித்தேம் - (தவணை கடந்து விட்டதால்) இறப்பதற்குத் துணிவு
கொண்டோம்; என்றும் இம் மாளா வசையொடும் - எப்பொழுதும் அழியாத
இந்தப் பெரும்பழியுடனே; மீளவும் உற்றேம் - திரும்பிச் செல்லவும்
துணிந்தோம்; அன்னவை தீரும் - (பின்பு) அவ் விரண்டு பிழைச்
செயல்களும் நீங்கும்படியான; வெளி பெற்றேம் - (சாதலும் மீண்டும்
செல்லுதலுமாகிய அவ் விரண்டும் அற்ற ஒரு நல்ல வழியைச் சம்பாதியின்
சொல்லால்) அடைந்தோம்; காள நிறத்தோடு ஒப்பவர் மாய - நஞ்சு போன்ற
கரிய நிறத்தையுடைய அரக்கர்களை அழியும்படி; கடல் தாவுற்று - கடலைத்
தாவிக் கடந்து; ஆளும் நலத்தீர் - வீரங்காட்ட வல்ல சிறப்புடையவர்களே!
எம் ஆருயிர் ஆளுமின் - (அவ்வாறு செய்து) எங்களது அரிய உயிர்களைப்
பாதுகாத்து அருளுங்கள் (என்று கூறினார்கள்).

     மாண்டுறுவது நலமென வலித்தனம்' என்று முதலில் தமது உயிரை விட
வானரர் கருதியதால் 'மாள வலித்தேம்' என்றும், அங்கதன் தான் இறக்க
மற்றவர் திரும்பிச் செல்லவேண்டுமெனவும், தாம் இறக்க இளவரசன் அங்கதன்
திரும்பிச் செல்லுதலே தகுதியெனவும் இவ்வாறு வானர வீரர்களுக்குள்
உரையாடல் நிகழ்ந்ததால் 'என்றும் இம் மாளா வசையோடு மீளவுமுற்றேம்'
என்றும், அப்போது சம்பாதி வந்து சீதை இருக்கு மிடத்தைத் தெரிவித்துச்
செய்ய வேண்டுவனவற்றைத் தெளிவித்தானாதலால் 'அன்னவை தீரும் வெளி
பெற்றேம்' என்றும் கூறினர்.  கடல் கடந்து சென்று சீதையைக் கண்டு மீளா
விடின், கடுந்தண்டனையுடைய சுக்கிரீவனது கோபத் தீயிலிருந்து தப்புவது
அரிதாதலால், இந்த அரிய செயலைச் செய்து முடித்து எங்களது உயிரைக்
காக்க வேண்டுமென்று வானர வீரர் சிலர் வேண்டினர் என்பது, கருத்து;
இதனால் தமக்குக் கடல் கடந்து மீளுந் திறமில்லையென்று அவர்கள்
வெளியிட்டவாறு.

     அம்மா : இரக்கத்தையுணர்த்திய இடைச் சொல்.                  3