4715. | 'வேதம் அனைத்தும் தேர்தர, எட்டா ஒரு மெய்யன் பூதலம் முற்றும் ஓர் - அடி வைத்துப் பொலி போழ்து, யான் மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு மோத இளத்தே தாள் உலைவுற்றேன் - விறல் மொய்ம்பீர்! * |
விறல் மொய்ம்பீர் - வலிய தோள்களையுடையவர்களே!வேதம் அனைத்தும் - வேதங்கள் யாவும்; தேர்தர எட்டா - தேடிப்பார்க்கவும் அகப்படாத; ஒரு மெய்யன் - ஒப்பற்ற வடிவுடைய திருமால்; பூதலம் முற்றும் ஓர் அடி வைத்து - (திரிவிக்கிரமானகப்) பூமி முழுவதும் ஓர் அடியைவைத்து அதனுள் அடங்கச் செய்து; பொலி போழ்து - பேருருவம் எடுத்து விளங்கிய காலத்தில்; மாதிரம் எட்டும் - (நான்) எட்டுத் திக்குகளிலும்; பறை வைத்தே - பறையடித்து அப் பெருமாள் உலகமளக்கும் செய்தியைத் தெரிவித்தபடி; சூழ்வர - சுற்றிக் கொண்டு அவன்முன்னே செல்லும் போது; மேரு மோத - மேருமலை இடையே தாக்கியதால்; இளைத்து - (நான்) வலிமை குன்றி; தாள் உலைவுற்றேன் - என் கால்கள் வலியெடுத்து வருந்தினேன்; திரிவிக்கிரம அவதார காலத்தில் உலகமுழுவதும் நிறைந்த திருமாலின் திருவடியை வணங்கிக் கொண்டே பலமுறை பூமியை வலம் வருகையில் மேருமலை எனது காலிற்பட்டுக் கால் சிறிது ஊனமானதால் இப்போது கடல்கடக்கும் வலிமையில்லாதவன் ஆயினேன் என்று சாம்பவான் கூறினான் என்பது. மொய்ம்பு: தோள். எட்டு மாதிரங்கள்: கிழக்கு முதலான பெருந்திசைகள் நான்கு; தென்கிழக்கு முதலிய கோணத் திசைகள் நான்கு. ஐந்து, ஆறு ஆகிய ஒரு செய்யுட்களும் ஒரு தொடராய் இயைந்து பொருள் முடிவு கொண்டதால் ஆறாவது செய்யுளின் ஈற்றிலுள்ள 'நாலு முகத்தான் உதவுற்றான்' என்ற தொடர் இங்கு எழுவாயாகக் கொள்ளப்படுதற்குரியது. 5 |