4716. | 'ஆதலின், இப் பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும், சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று' என்று ஓதி இறுத்தான் - நாலுமுகத்தான் உதவுற்றான். |
ஆதலின் - ஆதலால்; இப்பேர் ஆர்கலி - இந்தப் பெரிய கடலை; குப்புற்று - தாவித் தாண்டி; அகழ் இஞ்சி மீது - அகழியைச் சார்ந்த (இலங்கையில்) மதில்கள் மேல்; கடந்து - கடந்து சென்று; தீயவர் உட்கும் வினையோடும் - கொடியவர்களான அந்த அரக்கர்கள் அஞ்சிநடுங்கும் வீரச் செயலுடனே; சீதைதனைத் தேர்ந்து - சீதையைத் தேடிக் கண்டுபிடித்து; இங்கு உடன் மீளும் - இங்கே உடனே திரும்பி வரக்கூடிய; திறன் இன்று என்று - வலிமை எனக்கு இல்லையென்று; ஓதி இறுத்தான் - சொல்லிமுடித்தான்; நாலு முகத்தான் உதவுற்றான் - நான்கு முகங்களையுடைய பிரமதேவன் அருளிய சாம்பவான். ஆர்கலி: நிறைந்த ஓசையையுடைய கடல் - காரணப் பெயர்: வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. குப்புதல்: குதித்தல்; தாண்டிக் கடத்தல். அகழ்: அகழப்படுவது - முதனிலைத் தொழிற் பெயர். இஞ்சி : மதில். 6 |