இருளிலிருந்து விடுதலை பெறுவதற்கு உரியதைச் செய்யுமாறு அனுமனை வானரர் வேண்டுதல் 4587. | 'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப் பிழைத்து உயிர் உயிர்க்க அருள் செய்த பெரியோனே! இழைத்தி, செயல் ஆய வினை' என்றனர் இரந்தார்; வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான், |
முழைத்தலை - (மற்றைய வானரவீரர் அனுமனை நோக்கி) இந்தப் பிலத்துவாரத்தில்; இருட்கடலில் மூழ்கி - இருளாகிய கடலில் மூழ்கி; முடிவேமை - இறக்க வேண்டிய எங்களை; உயிர் பிழைத்து உயிர்க்க - இறவாமல் தப்பி வாழும்படி; அருள் செய்த- கருணை புரிந்த; பெரியோனை - பெருமைக் குணமுடையவனே! செயல் ஆயவினை - இனிச் செய்யத்தக்க செயலை; இழைத்தி - செய்வாய்; என்றனர் இரந்தார் - என்று பணிந்து வேண்டினார்கள்; வழுத்த அரிய மாருதியும் - புகழ்ந்து கூறமுடியாத (மிக்க நற்குணங்களையுடை) அனுமனும்; அன்னது வலிப்பான் - அவ்வாறே செய்வதற்கு மனத்தினில் உறுதிகொண்டான். இந்தப் பிலத்துள் சீதைஇல்லையென்பது தெளிவாக விளங்க, இனி இங்கிருப்பதால் எவ்விதப் பயனுமில்லையாதலால் உடனே வெளியே செல்வதற்குரிய செயலை நாடவேண்டுமென்று அனுமனை மற்றை வானரர் வேண்டிக்கொள்ள, அனுமனும் அதற்கு இசைந்தான் என்பது. எங்களைப் பிலத்தில் பாதுகாத்தது போலவே இந்தச் சுயம்பிரபையும் இப் பிலத்திலிருந்து நற்கதியடையுமாறு பாதுகாக்க வேண்டுமென்று வானரவீரர் அனுமனை வேண்டினர் எனவும் கூறுவர். 67 |