4718.'ஆரியன் முன்னர்ப் போதுற
      உற்ற அதனாலும்,
காரியம் எண்ணிச் சோர்வு
      அற முற்றும் கடனாலும்,
மாருதி ஒப்பர் வேறு இலை'
      என்னா, அயன் மைந்தன்
சீரியன் மல் தோள் ஆண்மை
      விரிப்பான், இவை செப்பும்:     *

     ஆரியன் முன்னர் - (முதலில்) இராமபிரானின் எதிரே சென்று; போதுற
உற்ற அதனானும்
- (இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும்) நட்புச் செய்வித்த
தன்மையாலும்; காரியம் எண்ணி - (தான்) மேற்கொண்ட செயலை
ஆராய்ந்து; சோர்வு அற முற்றும் - சிறிதும் சோர்வில்லாமல் முடிக்கும்;
கடனானும் - கடமையைக் கைக் கொண்டமையாலும்; மாருதி ஒப்பார் வேறு
இலை என்னா
- மாருதியையொப்பவர் வேறெ ஒருவருமில்லை என்று
சொல்லி; சீரியன் மல்தோள் - சிறந்தவனான அந்த அனுமனது மற்போருக்கு
உரிய தோள்களின்; ஆண்மை தெரிப்பான் - வலிமையைத் தெரிவிக்கும்
பொருட்டு; இவை செப்பும் - இவ்வாறான மொழிகளை அனுமனைப் பார்த்து
கூறலானான்; அயன் மைந்தன் - பிரமன் புதல்வனான சாம்பவான்.

     தெரித்தல்: தெரியச் சொல்லுதல் இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பைச்
செய்தவனும், தான் மேற்கொண்ட செயலை ஆராய்ந்து சோர்வில்லாமல்
முடிக்கவல்லவனுமாகிய அனுமனையொப்பவர் வேறு யாருமில்லையென்றார்.
                                                            8