சாம்பவான் அனுமனது வீரத்தைப் புகழ்தல்

4719.'மேலை விரிஞ்சன் வீயினும்
      வீயா மிகை நாளிர்;
நூலை நயந்து, நுண்ணிது
     உணர்ந்தீர் நுவல் தக்கீர்;
காலனும் அஞ்சும் காய் சின
      மொய்ம்பீர்; கடன் நின்றீர்;
ஆலம் நுகர்ந்தான் ஆம் என
      வெம் போர் அடர்கிற்பீர்;

     மேலை விரிஞ்சன் - (சாம்பவான் அனுமனை நோக்கி) யாவரினும்
மேம்பட்டவனான பிரமதேவன்; வீயினும் - இறந்து போனாலும்; வீயா -
அழியாத; மிகை நாளீர் - மிகுதியான நீண்ட வாழ்நாள்களையுடையவரே!
நூலை நயந்து - எல்லாக்கலைகளையும் விரும்பி; நுண்ணிது உணர்ந்தீர் -
நுட்பமாக ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்கள்; நுவல் தக்கீர் - (செய்திகளை)
எடுத்துக் கூறத்தக்க சொல்வன்மையுடையவரே; காலனும் அஞ்சும் - யமனும்
கண்டு அஞ்சத் தக்க; காய்சின மொய்ம்பீர் - கடுங்கோபத்துடன் கூடிய
வலிமையுடையவரே! கடன் நின்றீர் - உமது கடமையில் தவறாது உறுதியுடன்
நின்றவராவீர்; ஆலம் நுகர்ந்தான் ஆம் என - ஆலகாலம் என்னும்
நஞ்சையுண்ட சிவபிரான்போல; வெம்போர் அடர்கிற்பீர் - கடும்போர்
செய்து (யாரையும்) அழிக்கவல்லீர்.

     முனிவர் சாபத்தால் தனது வல்லமையையுணராது தயங்கி நிற்கும்
அனுமனைச் சாம்பவான் கடல் கடக்குமாறு கூறுதற்பொருட்டுத் துதிக்கின்றான்
என்பது. முதலடி அனுமனின் சிரஞ்சீவித் தன்மையையும் இரண்டாமடி
பெருங்கல்வியால் அவன் சொல்வன்மை பெற்றிருப்பதையும், பின்னிரண்டடிகள்
மேற்கொண்ட செயலைப் பின்வாங்காது நின்று போர் செய்தாவது முடிக்கும்
ஆற்றல் பெற்றிருப்பதையும் விளக்கும்; இதனால், எவ்வகையாலும் சாவில்லாமல்
அரக்கனாகிய இராவணனூர்க்குச் சென்று அவனோடு நயமாகப் பேசி
இடையூறு செய்யும் அரக்கர்களையழித்துச் சீதையைக் கண்டு மீளுகின்ற
செயலை முடிப்பதற்கு உரியவன் நீயே என்று குறிப்பாக உணர்த்தினான்
என்பது. வருணன், யமன், சிவபிரான், பிரமன், மற்ற தேவர்கள், மறையவர்,
முனிவர் முதலோர் அனுமனுக்கு அழியாத வரத்தை அளித்துள்ளனர்.
'பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு' என்னும் குறள் தொடரை நுண்ணிது
உணர்ந்தீர் என்ற தொடர் நினைவூட்டுகிறது. மேலை:ஐ-சாரியை.          9