4722.'மேரு கிரிக்கும் மீது உற
      நிற்கும் பெரு மெய்யீர்;
மாரி துளிக்கும் தாரை
      இடுக்கும், வர வல்லீர்;
பாரை எடுக்கும்நோன்மை வலத்தீர்;
      பழி அற்றீர்;
சூரியனைச் சென்று, ஒண்
      கையகத்தும் தொட வல்லீர்;

     மேரு கிரிக்கும் மீது உற - மேரு மலைக்கும் மேலாக; நிற்கும் -
ஓங்கி நிற்கும்;  பெரு மெய்யீர் - பெரிய உடம்பையுடையீர்; மாரி துளிக்கும்
தாரை இடுக்கும் -
மேகங்கள் சொரியும் மழைத்துளிகளின் நடுவிடும்; வர
வல்லீர் -
(சிறு வடிவெடுத்து) நுழைந்து வரும் வல்லமையுடையீர்!பாரை
எடுக்கும் நோன்மை வலத்தீர் -
இப் பூமியையே பேர்த்தெடுக்கும் மிக்க
வலிமையுடையவராவீர்! பழி அற்றீர் - (பெரு வரங்களைத் தீய வழியில்
செலுத்தாததால் சிறிதும்) பழிப்பில்லாத வராவீர்; சென்று ஒண் கையகத்தும் -
மேலே சென்று அழகிய கைகளாலும்; சூரியனைத் தொடவல்லீர் - சூரிய
தேவனைத் தொடவும் வல்லவராவீர்.

     அனுமன் தன் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால்
மேருமலையைக் காட்டிலும் அவனுடம்பு பெரியதாகும்; அந்த உடம்பைச்
சிறிதாக ஒடுக்க விரும்பினால் அணுவைக் காட்டிலும் அவனுடம்பு சிறியதாகும்
என்பது. இவ்விரண்டும் யோக சித்திகளும் முறையே மகிமா, அணிமா என்னும்
சித்திகளாகும்.  தாரை: நீரொழுக்கு. நோன்மை வலம்: ஒரு பொருட் பன்மொழி.
மேரு கிரிக்கும்: உம்மை உயர்வு சிறப்பு. ஒப்பு: 'பிறியா அறத்தின் அனுமன்
வளர்ச்சி பெரு மேருவினிற் பெரியனாம்; சிறிதா யொடுக்குமெனின் மேனியற்ப
அணுவானதிற் சிறியனாம்' - (உத்தர -அனுமப்.7)                      12