4723. | 'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை மறிந்து உருள, போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்; பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி, இற்றுஓர் புன் மயிரேனும் இழவாதீர்; |
திறத்து ஆறு - உரிய வழிகளை; எண்ணி அறிந்து - ஆராய்ந்து அறிந்து; அறத்து ஆறு அழியாமை - (அரசர்க்குரிய) அறநெறி தவறாமல்; போர் வாலியை - போர்த் திறமை மிக்க வாலியென்பவனை; மறிந்து உருள வெல்லும் - குப்புற விழுந்து உருளும்படி வெல்லச் செய்த; மதி வல்லீர் - அறிவின் வல்லமையுடையீர்; இமையோர் கோன் - தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்; பொறிந்து - (கண்களில்) தீப்பொறியைக் கக்கிக் கொண்டு; வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி - வச்சிராயுதத்தை உடம்பில் மூழ்குமாறு எறிந்தபோது; ஓர் புன்மயிரேனும் - ஒரு சிறி மயிர்கூட; இற்று இழவாதீர் - அறுபட்டு இழவாதவரும் ஆவீர்! அறத்தின் வழிக்குச் சிதைவு வராத வகையில் போர்வல்ல வாலியை அழிவிக்கும் அறிவில் வல்லவன் என்று மாருதியைக் குறிப்பிடும் பாங்கு எண்ணுதற்கு உரியது. 'தருமத்தின் தனிமை தீர்ப்பான்' (3781) எனவும். அறத்துக்கு ஆங்கொரு துணை என நின்ற அனுமன் (5803) எனவும் அனுமன் குறிக்கப்பட்ட தொடர்களோடு இச்செய்தியை இணைத்து நோக்க வேண்டும் வாலி வதையில் அறக்கழிவு இல்லை என்பதற்கு அனுமன் தக்க அறிவுரை கூறியிருக்க வேண்டும் என்பதற்கும் இத்தொடர் சான்றாகிறது. அனுமன் இராமனுடனே சுக்கிரீவனை நட்புச் செய்வித்தவுடனே, முதலில் வாலியை வதைசெய்து, பின்பு சீதையைத் தேடுவது மிகவும், நன்மை தருவது என்று கூறினானாதலால் அவனை 'வாலியை வெல்லும் மதிவல்லீர்' என்றும் விளக்கலாம். அனுமன் பிறந்தவுடன் சூரியனை ஒரு கனியெனக் கருதி அதனைப் பற்றியுண்ண வானில் எழுந்தபோது இந்திரன் அவன் மேல் தன் வச்சிரப் படையை ஏவியதை 'இமையோர் கோன் வச்சிரபாணம் புக மூழ்க எறிந்துழி'என்றார். 13 |