4724. | 'போர்முன் எதிர்ந்தால் மூ உலகேனும் பொருள் ஆகா; ஓர்வு இல் வலம் கொண்டு, ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்; பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன், தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தெரிவுற்றீர்; |
மூ உலகேனும் - மூன்று உலகங்களில் உள்ளோர்களும்; போர்முன் எதிர்ந்தால் - போர்க்களத்தில் உம் முன்னே எதிர்த்து வந்தாலும்; பொருள் ஆகா - ஒரு பொருட்டாக; ஓர்வு இல் - பிறரால் உணர்வதற்கரிய; வலம் கொண்டு - பெருவலிமைகொண்டு; ஒல்கல் இல்வீரத்து - தளராத வீரத்தன்மையால்; உயர்தோளீர் - சிறந்து விளங்கும் தோள்களையுடையீர்! பார் உலகு எங்கும் - இந்தப் பூமியோடு மற்ற உலகங்கள் எங்கிலுமுள்ள; பேர் இருள் - மிக்க இருளை; சீக்கும் பகலோன்முன் - ஒழிக்கின்ற சூரியன் எதிரே; தேர்முன் நடந்தே - அவனது தேர்க்கு முன்னே நடந்து கொண்டே; ஆரிய நூலும் - வடமொழி நூல்கள் அனைத்தையும்; தெரிவுற்றீர் - கற்றறிந்து கொண்டீர். அனுமன் சூரியதேவனிட்ம் வியாகரணம் முதலிய கலைகளைக் கற்க விரும்ப, அவன் தான் எப்பொழுதும் வானவீதி வழியே உலகங்களைச் சுற்றிச் செல்பவனாதலால், தான் ஓரிடத்திலிருந்து அவனுக்குப் பாடம் சொல்ல இயலாது என்று கூற, அனுமன் அவன் எதிர் முகமாய் நடந்து சென்றே பாடங்கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆனான். பாருலகு: பாராகிய உலகு: இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சீத்தல் : அழித்தல். 14 |