4725. | 'நீதியின் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும் ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்; |
நீதியில் நின்றீர் - நீதிநெறியில் நிலை பெற்றுள்ளீர்; வாய்மை அமைந்தீர் - சத்திய நெறியால் பொருந்தியுள்ளீர்; மாதர் நலம் - மகளிர் இன்பத்தை; நினைவாலும் - மனத்தாலும்; பேணாது வளர்ந்தீர் - எண்ணாது வளர்ந்துள்ளீர்; மறை எல்லாம் - வேதங்களையெல்லாம்; ஓதி உணர்ந்தீர் - கற்று அவற்றின் பொருள்களையும் அறிந்துள்ளீர்; ஊழி கடந்தீர் - பிரம கற்பமான ஊழிக் காலத்தையும் கடந்த ஆயுளையுடையீர்; உலகு ஈனும் - உலகங்களைப் படைக்கின்ற; ஆதி அயன்தானே என - முதற் கடவுளான பிரம தேவனே நீரென்று; யாரும் அறைகின்றீர் - யாவரும் சொல்லக் கூடிய சிறப்புடையீர். அனுமன் நித்தியப் பிரமச்சாரியாதலால் 'நினைவாலு் மாதர்நலம் பேணாது வளர்ந்தீர்' என்றும், சிரஞ்சீவி யாதலால் 'ஊழி கடந்தீர்' என்றும், அடுத்த பிரம பட்டத்தைப் பெறக் கூறியவனாதலால் 'ஆதியயன்தானே யென யாரும் அறைகின்றீர்' என்றும் கூறப் பெற்றான். 'நினைவாலும்' என்றது மற்ற சொல்லாலும், செயலாலும் என்பதை உள்ளடக்கிய உயர்வுகுறித்தது. 15 |