4726. | 'அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர்; அதனானே கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத் திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்; புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்; |
அண்ணல் அம் மைந்தர்க்கு - பெருமையில் சிறந்த அந்த இராம, இலக்குவரிடத்தில்; அன்பு சிறந்தீர் - பேரன்புடையீர்; அதனானே - அக் காரணத்தால்; கருமம் கண்ணி உணர்ந்தீர் - செய்ய வேண்டிய செயலை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்; நுமக்கே கடன் என்ன - (சீதையைத் தேடிச் செய்தியறிந்து வருவது) உமக்கே கடனாகுமென்று; திண்ணிது அமைந்தீர் - உறுதியாக ஏற்றுக் கொண்டீர்; சிதைவு இன்று - செயல் செய்வதில் அழிவு இல்லை; செய்து முடிப்பீர் - எனவே செயலைச் செய்து முடிப்பீர்; புண்ணியம் ஒன்றே - புண்ணியம் ஒன்றையே; என்றும் நிலைக்கும் பொருள் - எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று; கொண்டீர் - (மனத்தில் உறுதியாகக்) கருதியிருக்கின்றீர். வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம் தெரிந்தனராதலால் 'கண்ணியுணர்ந்தீர் கருமம்' என்றான் சாம்பவான். 'சிதைவின்றிச் செய்து முடிப்பீர்' - நீரே இலங்கையிற் சென்று சீதையின் செய்தியை உணர்ந்து வருந் தொழிலைச் செய்து முடிக்க வேண்டுமென்பது குறிப்பு. 'இன்றி' என்னும் வினையெச்சம் செய்யுளாதலால் 'இன்று' எனத் திரிந்து வந்தது. 16 |