4727.'அடங்கவும் வல்லீர்' காலம்அது
      அன்றேல்; அமர் வந்தால்,
மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர்;
      மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ? முற்றும்
      முடிக்கும் தொழில் அல்லால்,
இடம்கெட, வெவ் வாய்
      ஊறு கிடைத்தால் இடையாதீர்;

     காலம் அது அன்றேல் - அது ஏற்ற காலமல்லாவிட்டால்; அடங்கவும்
வல்லீர் -
அடங்கியிருக்கும் வல்லமையுடையீர்; அமர் வந்தால் - போர்
மூளுமானால்; மடங்கல் முனிந்தாலன்ன - ஓர் ஆண் சிங்கம் சினந்து
எழுந்தாற்போல; வலத்தீர் - வலிமையுடையவராவீர்; மதி நாடி - அறிவினால்
ஆராய்ந்து பார்த்து; தொடங்கியது ஒன்றோ - செய்யத் தொடங்கிய ஒரு
செயல்மட்டுமோ; முற்றும் முடிக்கும் தொழில் அல்லல் - அதற்குத்
தொடர்பான எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கும்
தொழில்திறமுடையவரேயல்லாமல்; இடம் கெட - பெருமையழியும்படி;
வெவ்வாய் ஊறு கிடைத்தால் -
கொடி இடையூறு நேர்ந்தாலும்; இடையாதீர்
-
(அஞ்சிப்) பின்வாங்காது நிற்பீர்.

     தொடங்கியதொன்றோ - ஓகாரம் எதிர்மறைப் பொருளது.  இடங்கெடல்:
சமயத்தில் மாறுபடுதல்.  ஊறு : துன்பம், தடை - உறு என்னும் முதனிலைத்
திரிந்து தொழிற்பெயர்.

     'ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து'
(486) 'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து'
(490) 'அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற, இடுக்கண் இடுக்கட் படும்' (625)
என்னும் குறட்பாக்களின் கருத்துக்கள் இச் செய்யுளில் பொதிந்துள்ளவாறு
காணலாம்.                                                     17