4728. | 'ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் பாண்டிதர் நீரே; பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்; வேண்டிய போதே வேண்டுவ எய்தும்வினை வல்லீர். |
ஈண்டிய கொற்றத்து - மிக்க வெற்றியையுடைய; இந்திரன் என்பான் முதல்யாரும் - இந்திரன் முதலான யாவரும் (இவரது ஒழுக்கமே சிறந்ததென்று); பூண்டு நடக்கும் - கடைப்பிடித்து நடக்கத்தக்க; நல் நெறியானும் - நல்லொழுக்கத்தாலும்; பொறையாலும் - பொறுமைக் குணத்தாலும்; பாண்டிதர் நீரே - நீரே தேர்ச்சி பெற்றவராவீர்; பார்த்து இனிது உய்க்கும்படி - (எச் செயலையும்) ஆராய்ந்து இனிதாக நடத்தும்; வல்லீர் - வல்லமையுடையீர்; வேண்டியபோதே - விரும்பிய அப்பொழுதே; வேண்டுவ எய்தும் - விரும்பியவற்றையெல்லாம் அடையவல்ல; வினை வல்லீர் - தவச் செயலிலும் வல்லவர் ஆவீர். உமது ஒழுக்கம் இந்திரன் முதலோர்க்கும் வழி காட்டியாக உள்ளது என்பது முதலிரண்டடிகளின் கருத்து. வீரம், வெற்றி முதலிய நற்பண்புகள் நிரம்பியிருப்பினும் அனுமன் அவற்றைச் சிறிதும் பாராட்டாமல் எளிய வானரன்போல இருப்பதால் அக் குணத்தைப் 'பொறையாலும்' என்று சாம்பவான் பாராட்டினான். கடல் கடந்து சீதையைக் கண்டு வரவேண்டுமென்று நினைத்தால் உடனே செய்து முடிக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டென்பதைப் பின்னிரண்டடிகள் குறிப்பிக்கும். வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப்படும் (265) என்ற குறளின்படி வேண்டிய போதே வேண்டுவன எய்தும் வினை எனத் தவ ஒழுக்கத்தைக்குறித்தார். பாண்டிதர் - பண்டிதர் என்ற சொல்லின் முதலெழுத்து நீண்டது - தேர்ச்சியுடையவர் என்பதுபொருள். 18 |