4729. | 'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்; ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லாச் சாகரம் முற்றும் தாவிடும் நீர், இக் கடல் தாவும் வேகம் அமைந்தீர்!' என்று விரிஞ்சன் மகன் விட்டான். |
நீர் - நீவிர்; இக்கடல் தாவும் - இந்தக் கடலைக் கடந்து சென்று மீளுவதற்குரிய; வேகம் அமைந்தீர் - வலிமை பொருந்தியுள்ளீர் (ஆதலால்); ஏகுமின் - விரைந்து செல்லுக; ஏகி - அவ்வாறு சென்று; எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் - எங்களுக்கெல்லாம் உயிரைக் கொடுத்துப் பெரும் புகழையடையுங்கள்; உம் மன்னையும் - உம் தலைவனாகிய இராமபிரானையும்; ஓகை கொணர்ந்து - (சீதை இலங்கையிலுள்ள) மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து; இன்னல் குறைவு இல்லாச் சாகரம் - (சீதையின் பிரிவாலான) குறையாத துன்பக் கடல்; முற்றும் தாவிடும் - முழுவதையும் கடந்து கரையேறச் செய்யும்; என்று - என்று கூறி; விரிஞ்சன் மகன் - பிரமகுமாரனான சாம்பவான்; விட்டான் - (கடலைக் கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டான். நீர் கடல் கடந்து சென்றால் இராமபிரானையும் துன்பக் கடலிலிருந்து கரையேற்றியவராவீர் என்று சாம்பன் குறிப்பாகப் புலப்படுத்தியிருப்பதை அறியலாம. எம்முயிர் நல்கி இசை கொள்ளீர்: நீர் கடல்கடந்து திரும்பிவந்தால் நாங்களும் இப்போது நினைத்தவாறு இறவாமற் பிழைப்போம்; இவ்வாறு பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும்புகழும் உமக்குக் கிடைக்கும் என்றவாறு. தவிர, சீதை, இராமபிரான் முதலிய அனைவரின் துயரமும், தேவர் துன்பமும் நீங்கக் காரணமாகிய புகழ் எனலாம். மன் - சுக்கிரீவனைக் குறித்ததாகவும் கொள்ளலாம். ஓகை : உவகை என்ற சொல்லின் திரிபு. 19 |