அனுமன் இலங்கை செல்ல உடன்படல்

4730.சாம்பன் இயம்ப, தாழ்
     வதனத் தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தாலன்ன
      சிரிப்பன், அறிவாளன்,
கூம்பலொடும் சேர் கைக்
      கமலத்தன், குலம் எல்லாம்
ஏம்பல் வர, தன் சிந்தை
     தெரிப்பான், இவை சொன்னான்:   *

     சாம்பன் இயம்ப - இவ்வாறு சாம்பவான் கூறிமுடிக்க; அறிவாளன் -
அறிவிற் சிறந்த அனுமன்; தாழ் வதனத் தாமரை நாப்பண் - தலைகவிழ்ந்த
முகமாகிய தாமரை மலரின் நடுவில்; ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் -
செவ்வாம்பல் விரிந்தது போன்று சிரிப்பவனும்; கூம்பலொடும் சேர் கைக்
கமலத்தன் -
குவிந்த தாமரைமலர் போன்ற கூப்பிய
கைகளையுடையவனுமாகிய; குலம் எல்லாம் ஏம்பல் வர - (அங்குள்ள)
வானரர் யாவர்க்கும் மகிழ்ச்சியுண்டாக; தன் சிந்தை தெரிப்பான் - தன்
மனக் கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு; இவை சொன்னான் - பின்
வருமாறு கூறலானான்.

     பிறர் தம்மைத் துதித்துப் புகழும்போது தலை கவிழ்தல் பெரியோரியல்பு.
ஆதலால், சாம்பவான் தன்னைப் புகழும்போது அனுமன் தாழ்ந்த
முகத்தையுடையவனானான் என்பது.  இது தற்புகழ்ச்சியை விரும்பாத
அனுமனது தன்மையையுணர்த்தியது.

     அனுமன் முகத்திற்குச் செந்தாமரையும், பற்களுக்கு ஆம்பல் மலரும்
முறையே பெருமையாலும் நிறத்தாலும் உவமைகளாயின.

     அனுமன் சிரிக்கும்போது முகத்தினிடையில் செந்நிறமான வாய்
விரிவதற்கும் பற்கள் தெரிவதற்கும் தாமரைப் பூ நடுவில் ஆம்பல் விரிவதை
உவமையாகக் குறித்தார்.                                         20