4732. | 'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக, ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங்கடல் இனிது தாவி, வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும் நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்; பின்னும், |
ஈசன் - திருமால்; மண் அளந்தது ஏய்ப்ப - உலகத்தையளந்தது போல; ஓசனை ஒன்று நூறும் - (இங்கிருந்து இலங்கைவரை) நூறு யோசனை தூரப் பரப்பையும்; உள் அடி உள்ளது ஆக - உள்ளங் காலின் ஓரடி வைப்புக்குள் அடங்கும்படியாக; இருங்கடல் இனிது தாவி - பெரிய கடலை மிக எளிதாகத் தாண்டி; வாசவன் முதலோர் - இந்திரன் முதலான தேவர்கள்; வந்து மலையினும் - (அரக்கர்க்கு உதவியாக) வந்து என்னையெதிர்த்துப் போர் செய்தாலும்; இலங்கை வாழும் - அந்த இலங்கை நகரில் வாழுகின்ற; நீசரை எல்லாம் நூறி - இழிவான அரக்கர்களையெல்லாம் வேரோடு அழித்து; நினைத்தது முடிப்பல் - மனத்தில் எண்ணிய காரியத்தை முடித்துவிடுவேன்; பின்னும் - மேலும்; ஒரு தாவலிலேயே நூறுயோசனை தூரமுள்ள கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லுமாறு பேருருக் கொள்ளப் போகும் அனுமனுக்கு, உலகம் முழுவதையும் ஓரடியால் அளந்த திரிவிக்கிரமன் உவமையாவான். மலையினும்: வாசவன் முதலோர் வந்து மலையமாட்டார் என்ற பொருளை வற்புறுத்தும். யோசனை: ஓர் எல்லையளவு. ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் 20, 21, 22 ஆகிய மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை. 22 |