அனுமன் பெரு வடிவு கொள்ளல் 4736. | பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல் உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும் திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான். |
பொரு அரு - ஒப்புக்கூறமுடியாத; வேலை தாவும் புந்தியான் - கடலைக் கடக்க வேண்டுமென்ற உறுதி கொண்ட அனுமன்; புவனம் தாய - உலகங்களைத் திரிவிக்கிரமனாய்த் தாவியளந்த; பெரு வடிவு உயர்ந்த மாயோன் - பெரிய உருவத்தால் உயர்ந்து விளங்கிய திருமாலினுடைய; மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல - மேலிடத்தில் பொருந்து மாறு உயரவெடுத்த திருவடிபோல; உரு அறி வடிவின் - (தனது) உருவத்தை யாவரும் அறியக் கூடிய பெரு வடிவத்தோடு; உம்பர் ஓங்கினன் - வானத்தையளாவ வளர்ந்தான் (அதனால்); உவமையாலும் - உவமைவகையாலும்; திருவடி என்னும் தன்மை - திருவடியென்கின்ற தனது திருநாமத்தின் தன்மை; யாவர்க்கும் தெரிய நின்றான் - யாவர்க்கும் விளங்கும் படி தோன்றி நின்றான். வானத்தையளப்பதற்காக உயரவெடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் திருவடிபோல, அனுமன் வானத்தையளாவுமாறு பெருவடிவங கொண்டானென்பது. இராமாவதாரத்தில் திருமாலுக்கு ஊர்தியாயிருந்து உதவியது பற்றிவந்த அனுமனது திருவடியென்ற பெயர்க்கு, இங்குத் திரிவிக்கிரமனது திருவடிபோல வளர்ந்தமையால் அப் பெயருண்டாயிற்று என்ற கருத்துப்படக் கூறியது. பிரிநிலை நவிற்சியணி. 26 |