4739. | மின் நெடுங் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப, தன் நெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ, வல் நெடுஞ் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் பாத சிலை என, பொலிந்து நின்றான். |
மின் நெடுங் கொண்டல் - மின்னலோடு கூடிய பெரிய மேகங்கள்; தாளின் வீக்கிய - (தன்) காலில் கட்டப்பெற்ற; கழலின் ஆர்ப்ப - வீரக் கழல்போல ஒலிக்கவும்; தன் நெடுந்தோற்றம் - நீண்டுயர்ந்த தனது பெரிய உருவமானது; வானோர் கட்புலத்து எல்லை தாவ - தேவர்களின் கண்பார்வையாகிய எல்லையைத் தாண்டிச் செல்லவும்; வல் நெடுஞ் சிகர கோடி - வலிய பெரிய சிகரங்களின் தொகுதியையுடைய; மகேந்திரம் - மகேந்திர மலையானது; அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் - இந்த அண்டகோளத்தைத் தாங்கி நிற்கும் பொன்மயமான பெரிய தூணின்; பாத சிலை என - அடியிலிட்ட கல்லைப் போல விளங்கவும்; பொலிந்து நின்றான்- (அந்த மகேந்திர மலையின் மேல் பேருருவத்துடன்) (அனுமன்) நிமிர்ந்துநின்றான். அனுமன் உலகைத் தாங்கும் தூண்போல நின்றான் என்பதும், அவன் நின்ற மலை அத் தூணின் அடியிலிட்ட கல்லைப்போல விளங்கிற்று என்பதும் விளங்கும். தற்குறிப்பேற்றவணி. அனுமன் பேருருவங்கொண்டபோது மேகமண்டலம் அவனது தாளினிடத்து இருந்ததென்பார், 'மின்னெடுங்கொண்டல் தாளின் வீக்கிய கழலினார்ப்ப' என்றார். மேருமலை இப்பூமியின் இடையே நின்று இந்த அண்டத்தைத் தாங்கும் பொன்தூண் போன்றது என்பது புராண நூல் துணிபு. அனுமன் பொன் நிறத்தாலும், வானுயர்ந்த தோற்றத்தாலும் மேரு மலைக்குஉவமை. 29 |