நந்தன வனங்கள்முதலியன வெந்தொழிந்த காட்சி

5971.

அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
புகல் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம்
                           போர்ப்ப,
பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள்.

     பகரும் ஊழியில்- நூல்களில் கூறப்படுவதான யுக முடிவுக் காலத்தில்;
காலம் வெம் கடும் கனல் பருகும் மகர வேலையின் - மிகக் கொடிய
காலாக்கினி உறிஞ்சி வற்றச் செய்யும் மகரம்
 முதலிய மீன்கள் வாழும்கடல்கள்
(அழிந்தன) போல; அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் புகர்
இல் நல் மரத்து உறு வெறி -
அகில் மரங்களும், நறுமணம் உள்ள
சந்தனமரங்களும் முதலான குற்றம் அற்ற சிறந்த பல மரங்களில் பொருந்திய
நறுமணம்; உலகு எலாம் போர்ப்ப - உலகம் முழுவதும் வீசிக் கவிந்து
கொள்ளுமாறு; நந்தன வனங்கள் - இலங்கையில் இருந்த சிங்காரத்
தோட்டங்கள்; வெந்தன - அத்தீயில் வெந்து அழிந்தன.

     கால முடிவில்,காலக் கொடுந்தீயால், கடல் நீர் வற்றி அழிவது போல,
அனுமன் வைத்த தீயால், இலங்கை நகரத்துப் பூந்தோட்டங்கள் அழிந்தன
என்பதாம். அகர் - அகில்; புகர் - குற்றம்; வெறி - மணம்; போர்ப்ப - மூட..
                                                          (29)