இமையவர்ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன் அமை திரு நகரைச்சூழ்ந்த அளக்கரைக் கடக்க, வீரன், சுமை பெறு சிகரகோடித் தொல் மயேந்திரத்தின், வெள்ளிச் சிமையமேல்நின்ற தேவன் தன்மையின், சிறந்து நின்றான்.
மகேந்திர மலையில்நிற்கும் அனுமன் கயிலை மலையில் நிற்கும் சிவபெருமான் போன்றான். அளக்கர் - கடல் வெள்ளிச்சிமயம் - கயி்லை. இவ்விரண்டு பாடல்கள் இப்படலத்தின் முன்னர் உள்ளன. இவற்றொடு கிட்கிந்தா காண்டம் மயேந்திரப்படல இறுதி நான்கு பாடல்களும் வரிசைமுறைமாறிக் கலந்துள்ளன.