மகேந்திரமலையில்  நிகழ்ந்த குழப்பம்

4743.

வன்தந்தவரிகொள் நாகம்,
     வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
     புறத்து உராய்ப் புரண்டு போவ -
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
    நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
     பிதுங்கினகுடர்கள் மான.
 

5
 
    அந்தம்இல்லான் - அழிவில்லாத அனுமன்; நின்று ஊன்ற - நின்று
(திருவடிகளை) வன்மையாக (மலையில்) பதிக்க (அதனால்); நெரிந்து -
சிதைந்து;  கீழ் அழுந்தி - பூமிக்கு அடியிலே புதைந்து; நீலக்குன்றம் -
நீலநிறமுடைய மகேந்திர மலை; தன் வயிறு கீறி - தன்னுடைய வயிறு
கிழிபட்டு; பிதுங்கிய குடர்கள் மான - வெளியிட்ட குடல்களைப் போல;
பொன்தந்த முழைகள் தோறும் - பொன்னைத் தருகின்ற குகைகள் தோறும்;
வயங்கு அழல் உமிழும் வாய - விளங்குகின்ற நெருப்பைக் கக்கும் வாயை
உடைய;  வன்தந்த வரிகொள் நாகம் - வலிமையான பற்களையும்
கோடுகளையும் பெற்ற பாம்பு;  உராய்ப் புரண்டு புறத்து போவ - உராய்ந்து
கொண்டு புரண்டு வெளியே சென்றன.

     அனுமன்திருவடியின் அழுத்தம் பெற்ற மலையின் குடல்வெளிப்பட்டாற் போலப் பாம்புகள் புறத்தே போந்தன.

    அந்தம் இல்லான்- அழிவற்றவன் (சிரஞ்சீவி). பாம்பைத் 'தந்தி' என்பர்,
கச்சியப்பர் - தந்தி நஞ்சம் தலைக்கொளச் சாய்ந்தவர் (கந்த 3-10-21) ஊன்ற -
அழுத்த 'அருவரை நெரிய வூன்றும் குழகனே' (நாவரசர் - நெற்றி மேல் 10).
பொன், மலையின்கண் தோன்றலின் பொன் தந்த முழைகள் என்றான்.
பொன்படு நெடுவரை. (சிலம்பு 28, 142) வரி அரவம் - கோடுகளை உடைய
பாம்பு. வரி அரவே நாணாக, மால்வரையே வில்லாக (சம்பந்தர் விடியலோர்
7). அனுமன் கடல் தாவப் போகிறான் - அதற்கு ஆயத்தப் படுத்த அவன்
திருவடியை வன்மையாகப் பதித்தான். வால்மீகி, "அனுமன் கடலைக் கடக்க
விரும்பிக் கைகளாலும் கால்களாலும் அந்த மலையை அழுத்தினான்.
அப்பொழுது அந்தப்பர்வதம் ஒரு முகூர்த்த காலம் கிடுகிடென்று நடுங்கிற்று"
என்பர். பிதுங்குதல் - அழுத்தம் பெற்ற பொருளுக்கு உள்ளே உள்ளவை
வெளிப்படுதல். இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும், கண்ணும்
பிதுங்க ஊன்றி (நாவரசர் தூண்டு சுடர் 10)                    (3)